- Ebooks
- Livres Audio
- Liseuses
சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்பை நோக்கிய மார்வார் ராஜபுத்திரனான ராவ்ஜோடா சந்தேகமறப் புரிந்துகொண்டான். எங்கும் வெள்ளை வெளேரென்று தெரிந்த அந்தப் பாலைவனத்துக்கு தனது கிரணங்களால் அதிகப்படியான தீட்சண்யத்தையும் பளபளப்பையும் பிற்பகல் கதிரவன் அளித்து அழகு செய்தாலும், அந்த அழகே தன்னைக் கொன்றுவிட முடியும் என்ற முடிவுக்கும் வந்த அந்த வாலிபன், "அழகினால் ஆபத்தே தவிர சுகம் ஏதுமில்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கொல்லும் வெயிலிலும் தன்னைச் சுமந்துகொண்டிருந்த புரவியின் முதுகில் ஒருமுறை தனது கையால் தட்டிக் கொடுத்ததன்றி, அதன் முதுகிலிருந்து கீழே இறங்கவும் செய்தான். அப்பொழுது அவன் கிட்டத்தட்ட அந்தப் பாலைவனத்தைத் துண்டு செய்து ஓடிக்கொண்டிருந்த லூனி என்ற உப்பனாற்றங்கரைக்கு வந்துவிட்டதால் தன்னை இரண்டு நாட்களாகத் துரத்தி வந்த ஆபத்து விலகிவிட்டதென்ற நினைப்பில் ஆற்றங்கரையை நடந்தே அணுகிய மார்வார் ராஜபுத்திரன் ஆற்றில் இறங்கி அதன் நீரை வாரித் தன் முகத்தில் அடித்துக்கொண்டான். பின்னால் தொடர்ந்து தன்னுடன் ஆற்றில் இறங்கிய புரவியின் முகத்திலும் நீரை அள்ளித் தெளித்தான். அந்த சைத்தியோபசாரத்தால் புரவி உடல் சிலிர்த்து, முகத்தை அந்த வாலிபன் தோளிலும் வைத்துப் புரட்டியது. அதன் முகத்தைத் தனது வலது கையால் தட்டிக் கொடுத்த ராவ்ஜோடா, மீண்டும் லூனி நதிக்குப் பின்னாலிருந்த பாலைவனத்தை உற்றுநோக்கினான். பழையபடி ஆரம்பத்தில் மனத்தில் உதயமான தத்துவத்தை எண்ணிப் பார்த்து அது முற்றிலும் சரி என்று மனத்துக்குள் சொல்லியும் கொண்டான்.
"காமத்வஜமென்றும் கனோஜ் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட கன்னோசியிலிருந்து, கங்கைக்கரையில் அமைந்திருந்த விஸ்தாரமான வளப்பமான நாட்டிலிருந்து, ஏன் இந்த மாரூஸ்தலி என்றும் மாரூஸ்தானமென்றும் அழைக்கப்பட்ட மரண பூமிக்கு சரித்திரம் எங்களைத் தள்ளிவிட்டது?" என்று வினாவைத் தொடுத்த அந்த ராஜபுத்திரன் "எங்கள் மூதாதையரான ஜெயசந்திரன் தனது மகளைத் தூக்கிச் சென்று கடிமணம் புரிந்த பிருதிவிராஜனை நசுக்கும் எண்ணத்துடன் கோரி நவாபான ஷாபுடீனை வரவழைத்தான். ஷாபுடீன் பிருதிவிராஜனையும் அழித்தான்; ஜெயசந்திரனையும் அழித்தான். ஆகவே, ஜெயசந்திரன் சந்ததிகளில் ஒருவரான சேவாஜி இந்த மாரூஸ்தலி என்ற மரண பூமியில் அரசை நிறுவினார். ஜெயசந்திரன் செய்த பாவம், அவர் சந்ததியை கங்கையின் உயிரூட்டும் வளமிக்க பூமியிலிருந்து விரட்டியது மட்டுமல்ல, மார்வார், மாரோவார், மாரூஸ்தலி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த வரண்ட பாலைவனத்து, மரணபூமிக்கு அனுப்பிவிட்டது. இப்பொழுது மீண்டும் என் தந்தை அதே சிதோதயர்களுக்கு துரோகம் செய்தார். இதோ நான் மரண பூமிக்கு மீண்டும் வந்துவிட்டேன். ஜெயசந்திரன் பாவத்திலிருந்து சிறிது மீட்சி, சிறிது புண்யம், சேவாஜியின் முயற்சியால், இப்பொழுது எனது தந்தையின் துரோகத்தால் மீண்டும் அதே பழைய பாலைவனம் ஒரு சுழற்சி, பாவ புண்யங்களின் ஒரு சுற்று முடிந்துவிட்டது. சரித்திரம்கூட ஒரு சுற்று சுற்றிவிட்டது. உயர்ந்த சாம்ராஜ்யம் சிதைந்து இருநூறு வீரர்களுடன் இந்தப் பாலைவனத்தை அடைந்த சேவாஜி இங்கு அரசை நிறுவினார். அந்த அரசு இப்பொழுது ஆட்டங்கண்டிருக்கிறது. நான் மீண்டும் அவரைப்போல் நிர்க்கதியாக இங்கு வந்திருக்கிறேன். சரித்திரமும் சுழன்றுவிட்டது ஒரு முறை. இத்தனைக்கும் காரணம் பூமி சக்கரமாயிருப்பதாலா? அது சுழல்வதால் வாழ்க்கையும் சுழலுகிறதா? சக்கரத்தில் வைக்கப்படும் ஒரு பொட்டுப்போல வாழ்க்கையும் உருண்டு, ஒருசமயம் மேலும் இன்னொரு சமயம் கீழுமாகச் சுழல்கிறதா? அப்படித்தானிருக்க வேண்டும்" என்று தனது கேள்விக்குப் பதிலும் சொல்லிக்கொண்டான் ராவ்ஜோடா.
இப்படி சிந்தனை வசப்பட்டுக்கொண்டே சித்தூரில் மேவார் வம்சத்தவனும் பரம தியாகியுமான சந்தசிம்ஹனால் கொல்லப்பட்ட தனது தந்தைக்கு லூனியில் இறங்கி மூழ்கி நீராடவும் செய்தான் மார்வார் இளவரசன். பிறகு புரவியின் மீது சொட்டச் சொட்ட இருந்த உடைகளுடனும் தலை மயிருடனும் ஏறி ஆற்றைக் கடந்து திரும்பி அக்கரையில் நீண்ட தூரத்தில் தெரிந்த ஆராவலி மலைத்தொடரை நோக்கி ஒரு முறை பொறாமைப் பெருமூச்சும் விட்டான். "ஆராவலி வலிமை மிக்கவர்களின் இருப்பிடம். என்ன அழகான பெயர்" என்றும் சொல்லிக்கொண்டு மார்வாரின் தென் பகுதியிலிருந்த அந்த மலைத்தொடரை நோக்கி இரண்டாம் முறையும் பெருமூச்சு விட்டான்.
Titre : மலை அரசி
EAN : 9798230604358
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook மலை அரசி est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte