- Ebooks
- Livres Audio
- Liseuses
அந்தப் பெண் மெள்ள நகைத்துவிட்டு, "அப்பா! பெண்ணாகிய நானே துணிந்து வந்திருக்கிறேனே! உங்களுக்கு என்ன பயம்?" என்று கேட்டாள்.
"இளவரசி! நீங்கள் பெண்ணாயிருந்தாலும் ஆயிரம் ஆண்பிள்ளைகளுக்குச் சமம். இல்லாவிட்டால் துணிந்து இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள்" என்றான் சிவிகை ஆள், அத்தனை பயத்திலும் விஷமத்தை மட்டும் கைவிடாமல். இதைக் கேட்ட மற்ற ஆட்கள் மெள்ளப் புன்முறுவல் பூத்தார்கள்.
இளவரசியை அப்படி அவமதிப்பாகப் பேசியதைக் கேட்ட ஆதி, தன் வாளை உறையிலிருந்து பாதிவரை உருவி விட்டான். ஆனால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாதபடி இளவரசியின் கரம் அவனைத் தடுத்தது. "ஆதி! அவனை ஒன்றும் செய்யாதே. பயத்தால் உளறுகிறான். கோஸ்வாமியின் கீர்த்தி இவர்கள் வரையில் பரவியிருக்கிறது பார்த்தாயா? சரி, அந்தப் பந்தங்களில் ஒன்றை நமது வீரர்களில் ஒருவன் வாங்கிக் கொள்ளட்டும். இன்னொரு பந்தம் அவர்களிடமே இருக்கட்டும்" என்று கூறிய இளவரசி, சிவிகை ஆட்களை நோக்கி, "முடிந்தால் நீங்கள் நான் திரும்பி வரும்வரை இங்கேயே இருக்கலாம், இல்லையேல் சிவிகையை வைத்துவிட்டுப் போய்விடுங்கள். வழியை அறிந்து செல்ல உங்களுக்கு ஒரு பந்தம் போதும்" என்று உத்தரவிட்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்பதைக் கவனிக்காமலும், மற்றுமொருமுறை அவர்களை நோக்கித் திரும்பாமலும், வீரனொருவன் முன்னே பந்தம் காட்டிச் செல்ல மற்ற வீரர்கள் பின்தொடர்ந்து வர, கோஸ்வாமியின் குகையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினாள்.
அவள் மலர்ப்பாதங்கள் கற்களில் அலட்சியமாக நடந்து செல்வதைப் பின்னாலிருந்து கவனித்த ஆதி, சில கொடிகளிலுள்ள புஷ்பங்கள் மலைப்பாறைகளில் படர்ந்து விளையாடுவதில் ஆச்சரியமில்லையென்றே நினைத்தான். இளவரசி உறுதியாகவும் அலட்சியமாகவும் நடந்து சென்றாள். அவள் இதயத்துக்குள்ளே பேரிரைச்சலுடன் தாண்டவமாடிக் கொண்டிருந்த உணர்ச்சிகளின் எழுச்சி, காட்டின் பயங்கர ஒலிகளை இருக்குமிடம் தெரியாமல் அடித்து விட்டதால், அவள் தங்கு தடையின்றி வேகமாகவே நடந்து சென்றாள். அவள் காலணிகள் அவள் உள்ளத்தில் உறுதியைச் சுட்டிக் காட்டுவனபோல் 'கலீர் கலீ'ரெனக் கம்பீரமாகச் சப்தம் செய்தன.
மிகவும் உறுதியுடன் நடந்து சென்ற இளவரசி மலையின் வளைவையும் இந்திரன் அருவியையும் தாண்டிக் கோஸ்வாமியின் மந்திரக் குகையின் நூற்றெட்டுப் படிகளின் உச்சிக்கு வந்து சேர்ந்தாள். இருட்டு நன்றாக ஏறிவிட்ட அந்தச் சமயத்திலும் கோஸ்வாமியின் குகைக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்த ஒரு வெளிச்சம் அந்த நூற்றெட்டுப் படிகளுக்கும் ஒளி அளித்ததால், அந்தப் படிகளில் செதுக்கப்பட்டிருந்த மந்திரங்கள் இளவரசியின் கண்களுக்குத் தெரிந்தன. ஏதோ உருத்தெரியாத சில கோடுகள் மாதிரியிருந்த அந்த மந்திர வெட்டுக்களும், அவற்றின் மீது நேர் கோட்டில் ஒற்றைப்பட்டையாக அளவிட்டுக் குகை விளக்கு வீசிய ஒளியும் பயமென்றறியாத இளவரசியின் இதயத்தையும் தொட்டுப் பார்த்ததால் அவள் உடலும் லேசாக நடுங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டாமலே இளவரசி படியிறங்கிக் குகை வாயிலை அடைந்தாள்.
குகை வாயிற்படியில் காலை வைத்ததுமே அதுவரை சற்றும் சலிக்காமல் வந்த மெய்க்காவலர் தலைவன் ஆதியின் உள்ளங்கூட பயத்தால் சலித்தது. குகைக்குள் வெளிச்சம் சிறிதும் இல்லை. உச்சிப்படியின்மீது தோன்றிய வெளிச்சம் வெறும் பிரமையா? பிரமையில்லாவிட்டால் படிகளின்மீது விழும் வெளிச்சம் எங்கிருந்து வந்தது? திகிலுடன் திரும்பிய ஆதி அப்பொழுதும் படிகளில் ஒற்றைப்பாள வெளிச்சம் படிந்து கிடப்பதைப் பார்த்தான். படிகளில் உச்சியிலிருந்து பார்த்தால் குகைக்குள் இருந்து வருவது போலவும், குகையை நெருங்கினால் வேறு எங்கிருந்தோ முளைப்பது போலவும் தோன்றிய அந்த வெளிச்சத்தின் சூட்சுமத்தை அறியமுடியாத ஆதி, கோஸ்வாமியைப் பற்றிச் சிவிகை ஆட்கள் பயந்ததில் அர்த்தமிருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டான். அந்த உணர்வின் காரணமாகவும் குகையின் இருட்டில் இளவரசிக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தால் என்ன செய்வது என்ற பயத்தாலும் அரசகுமாரியை நெருங்கி, "அம்மணி! நீங்கள் கொஞ்சம் பின்னடைந்து நில்லுங்கள். வழியை நான் தேடிப் பார்க்கிறேன்" என்றான்.
ஆதி சொற்படி இளவரசி நகர முயன்றாள். ஆனால் அதற்குள் நிகழ்ந்துவிட்ட திடுக்கிடும் சம்பவமொன்று ஆதியின் திடசித்தத்தையும் அசர வைக்கவே, ஒரு கணம் கல்லெனச் சமைந்து நின்றான் மெய்க்காவலன். அடுத்த விநாடி மிதமிஞ்சிய திகிலாலும் கலவரத்தாலும் நிலை குலைந்துபோன ஆதி, "ஐயோ!" என்று வாய்விட்டு பயங்கரமாக அலறினான்.
Titre : வசந்த காலம்
EAN : 9798230390510
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook வசந்த காலம் est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte